Wednesday, July 30, 2014

ஒன்றுமே வாங்காத நாள்..!

வி.நாகப்பன்

சென்ற இதழ் “அவள் விகடன்”-ல் வெளியான என் கட்டுரை

Freeganism & Buy Nothing Day !

'பை நத்திங் டே' (Buy Nothing Day -BND) என்றால் தெரியுமா?!
'எதுவுமே வாங்காமல் இருப்பதற்கான நாள்’ எனப்படும் இந்த 'பை நத்திங் டே', மெட்டீரியலிஸம் மற்றும் அதீத நுகர்வு கலாசாரத்துக்கு எதிரான முழக்கங்களுடன் சர்வதேச அளவில் இப்போது பிரபலமாகி வருகிறது. அமெரிக்காவில், நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழனன்று 'தேங்க்ஸ் கிவிங் டே’. இதற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமையன்று 'பை நத்திங் டே’ கொண்டாடப்படுகிறது.


தேவைக்கு அதிகமாக நுகர்வதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதகங்களையும், அதனால் பலனடைவது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் என்பதையும் மக்களுக்கு உணர்த்த, 92-ம் ஆண்டு துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நாள். உபரித் தேவைகளைக்கூட அத்தியாவசியத் தேவைகளாக நினைக்கும்படியாக நியாயப்படுத்தி, நம்மை அதிகமாக செலவுசெய்யத் தூண்டி, கடனாளியாக்கி லாபம் பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்களின் வியா பாரப் போக்கை எதிர்த்து, இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பூமியின் இயற்கை வளங்கள், 20% மக்களால் சுரண்டப்படுவதால் ஏற் படும் பாதிப்பை வெளிக் கொணர்வதும் இதன் நோக்கங்களுள் ஒன்று!

எப்படிக் கொண்டாடுவது இந்த நாளை?
திருவிழாவை எப்படிக் கொண்டாடுவது என்பதை, உலகுக்கே வகுப்பெடுப்போம் நாம். தீபாவளி, பொங்கல் என்றால் புதுத்துணி, நகை, ஷாப்பிங் என ஒவ்வொரு ஊரின் கடைவீதியுமே அல்லோலகல்லோலப்படும். ஆனால், நுகராதோர் தினம் அன்று எதுவுமே வாங்காமல் எப்படிக் கொண்டாடுவார்கள்?
பெரிய ஷாப்பிங் மால்களில் நடுவில் நின்று கிரெடிட் கார்டுகளை வெட்டிப்போடுவது, கடைகளில் ஷாப்பிங் டிராலிகளைத் தள்ளிக்கொண்டு/கூடைகளைக் கையில் எடுத்துக்கொண்டு ஒன்றும் வாங்காமல் ஊர்வலம்போல ஒருவர் பின் ஒருவராகச் செல்வது, இக்கருத்தை வலியுறுத்தும்விதமாக சாலையோர நாடகங்கள் நடத்துவது, இயற்கையைக் கொண்டாடும் விதமாக மலையேற்றம் என கைக்காசை செலவழிக்காமல் அன்றைய தினத்தைச் செலவிடுவது இவர்கள் வாடிக்கை.

மெட்டீரியலிஸ்டிக் உலகம் என்கிற மாயவலை!
பிரபலமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரை மாடல்களாகப் போட்டு கவர்ச்சிகரமான தொடர் விளம்பரங்கள் மூலமாக நம்மையும் நம் குடும்பத்தையும் மூளைச் சலவை செய்யும் இந்நுகர்வு கலாசாரம், மிக ஆபத்தானது. அலசி ஆராய்ந்து, 'நமக்கு இது அத்தியாவசியத் தேவை இல்லை, வாங்க வேண்டாம்’ என நம் அறிவு சொல்லும் ஒரு விஷயத்தை, இம்மாதிரி விளம்பரங்கள் மூலமாக நம் மனதை இளக்கி, சரி என நியாயப்படுத்த வைக்கிறார்கள்.
'மாற்றினால்தான் நீ மாடர்ன் மனிதன்’ கொள்கை!
அடுத்ததாக, தேவை இல்லாத பொருட்களை வாங்குவதுடன், அதையும் அடிக்கடி மாற்றுவது.  
முன்பெல்லாம் கைக்கடிகாரம் வேண்டுமென்றால், குறைந்தபட்ச தகுதி நாம் வேலைக்குப் போகத் துவங்க வேண்டும். கொஞ்சம் பணக்கார வீடுகளில் மட்டும் கல்லூரிக்குச் செல்லும்போது கைக்கடிகாரம் கிட்டும். அந்தக் கைக்கடிகாரம்தான் நம் வாழ்நாளெல்லாம். அடிக்கடி மாற்றுவதெல்லாம் முடியாது. சிலருக்கு திருமணத்தின்போது மாமனாரிடம் இருந்து கிடைக்கும் வாட்ச்தான் இரண்டாவது. இதைத் தவிர, பள்ளிக் காலங்களில் எல்லாம் திருவிழா பொம்மைக் கடிகாரம்தான்!
ஆனால் இன்று..? 'இந்த வாட்ச் வாங்கி ரெண்டு வருஷம் ஆச்சுப்பா... மாத்தணும்...’ என்று ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படிக்கும் வாண்டுகள்கூட சர்வசாதாரணமாக பேசுவதை, மிடில் கிளாஸ் வீடுகளிலேயே கேட்க முடிகிறது. எதற்காக மாற்ற வேண்டும்? 'எத்தனை நாள் ஒரே கடிகாரத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கிறது... போரடிக்குது...’, 'புதுசா ஒரு மாடல் வந்திருக்கு’, 'அந்த விளம்பரம் நல்லா இருந்தது’ என இந்த அநியாயச் செலவை, நியாயப்படுத்துகிறோம்.
உண்மையைச் சொல்லப்போனால், செல்போன் வந்த பின்னர் பெரும்பாலானவர்கள் மணி பார்ப்பது அதில்தான். ஆக, தேவையில்லாத, பயன்பாடு இல்லாத ஒரு பொருளை வாங்குவதோடு மட்டுமல்லாமல், அதை அடிக்கடி மாற்றும்படியும் தூண்டப்படுகிறோம்.
கைக்கடிகாரம் துவங்கி, தொலைக்காட்சிப் பெட்டி, செல்போன், டூ-வீலர் என இப்படிப் பல பொருட்களை சொல்லிக்கொண்டே போகலாம். நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் பைக்கை கூட மாற்றுவோம்... புது மாடல் வந்துவிட்டால்! மைலேஜ் சரியில்லை என நியாயப்படுத்துவோம். புது மாடல் செல்போனைப் பார்த்தவுடன் பழைய மாடல் கசக்கத் துவங்கும். 'ச்சே... வரவர ரொம்ப ஸ்லோ ஆயிடுச்சி, அடிக்கடி ஹேங் ஆகுது இப்பெல்லாம்’ என அலுத்துக்கொள்வோம். உண்மையைச் சொல்லுங்கள்... அதுவா காரணம்? நாம் புதிதாக வாங்கும் போனிலும் இப்பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும் என்பது நமக்குத் தெரியும்தானே?
ஒருவகையில் பார்த்தால், இது... சமூகரீதியாக நடக்கும் உளவியல் தாக்குதலும்கூட! இந்த அதீத நுகர்வு கலாசாரத்தின் தாக்கம்/தாக்குதல் நம் ஒட்டுமொத்த குடும்ப அமைப்பின் மீதுதான். அமைதி கெடவும், குடும்பங்கள் பிளவுபடவும்கூட இக்கலாசாரம் வழிவகுக்கிறது.

காசேதான் கடைசியடா!
சரி, என்னதான் செய்வது என்கிறீர்களா? அதைச் சொல்வதற்கு முன்பாக, ஃப்ரீகனிஸம் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
ஃப்ரீகனிஸம் (Freeganism) என்பது, காசில்லா வாழ்க்கை. அதாவது, கையில் காசே இல்லைஎன்றாலும் நம்மால் வாழ முடியும் என்ற வாழ்க்கையை முறையை வலியுறுத்தும் கொள்கை. இது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் சமீபகாலமாக பிரபலமாகி வரும் புதிய கலாசாரம். சென்ற ஆண்டு வெளியான 'ஈஸ்ட்’ எனும் ஆங்கிலப் படத்தின் இயக்குநரும் கதாசிரியரும், சில நாட்களுக்கு இப்படிச் செலவில்லாத வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்துப் பார்த்தனர். கையில் காசில்லாமல் என்றால், சாப்பாட்டுக்கு? இருக்கவே இருக்கிறது, 'ஃப்ரீகனிஸம்’.
இது என்ன புது இஸம்?
அதாவது, அடுத்தவர் வேண்டாம் எனக் குப்பையில் தூக்கி எறியும் உணவை எடுத்துச் சாப்பிடுவது. இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். இவர்கள் எடுத்துச் சாப்பிடுவது கெட்டுப்போன உணவை அல்ல, பணத்திமிர் பிடித்து தேவைக்கு அதிகமாக ஒருவர் வாங்கும் உணவில் அவர் சாப்பிட்டது போக தூக்கி எறியும் மீதத்தைத்தான் இவர்கள் எடுத்துச் சாப்பிடுகிறார்கள்!
'ஈஸ்ட்’ படத்தின் தாக்கமும் இதுவே. இப்படத்தில் வரும் 'ஈஸ்ட்’ அமைப்பின் உறுப்பினர் லூகா, அப்படிப்பட்டவன். சாலையோரக் குப்பைத் தொட்டிகளில் இறங்கி மிகுந்தவற்றை எடுத்துக் கொஞ்சம்கூடக் கூச்சமில்லாமல் சாவதானமாக உண்பதைப் பார்க்கும்போது, முதலில் அருவருப்பாகவும், வித்தியாசமாகவும் இருக்கலாம். ஆனால், அதன் பின்னால் உள்ள கொள்கை மிக முக்கியமானது; அழகானது.
எதுவும் வீணாகக் கூடாது, கெட்டுப்போனால் ஒழிய. அது எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பலன் அளிக்கக் கூடியதுதான். தூக்கி எறிந்து வீணாக்குவதால், சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவது அதிகமாகிறது. இப்படித் தூக்கியெறியப்படும் பொருட்களை வைத்தே வாழ்க்கையை ஓட்டும் முறையை தானாக முன்வந்து தேர்ந்தெடுத்துக் கொள்பவர்கள், 'ஃப்ரீகன்ஸ்’. அதீத நுகர்வுக் கலாசாரத்துக்கு எதிராக இதற்கு மேல் ஒரு விஷயத்தைச் சொல்வது கடினம்.
நடைமுறை வாழ்க்கையில், நாமெல்லாம் 'ஃப்ரீகன்ஸ்’ ஆக மாறுவது சாத்தியமில்லைதான். ஆனால், அதன் அடிப்படைக் கோட்பாட்டைப் புரிந்துகொண்டு, அத்தியாவசியத் தேவையை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு, தேவைக்கு மேல் நுகர்வதைக் குறைத்து, எதையும் வீணாக்காமல், அடுத்தவருக்குப் பயன்படும்படி செய்வோமானால், அது போதுமே இப்போதைக்கு!


எளிமையே... இனிமை!
ஆடம்பரங்களைத் தவிர்த்து, எளிய செலவுகளாலும், அன்பான விருந்தோம்பலாலும் உங்கள் இல்ல விழாவை அழகாக நடத்தியவரா நீங்கள்... எதிர்காலத்தில் நடத்த இருப்பவரா... இதை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளலாமே! சுருக்கமாக, அதேசமயத்தில் தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். பிரசுரமாகும் 'எளிமை'க்கு தகுந்த பரிசு உண்டு!
அனுப்ப வேண்டிய முகவரி: 'எளிமையே... இனிமை’, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002


வேஸ்ட்டாகும் காஸ்ட்லி விருந்து!
ழை நாடாக (அல்லது வளர்ந்து வரும் நாடு) கருதப்படும் நம் இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் வீணடிக்கப்படும் உணவின் அளவு மிக அதிகம். பெருமைக்காக வீண் செலவு செய்வதில் நமக்கு நிகர் நாம்தான். பாதி உணவு குப்பைத் தொட்டிக்குத்தான் செல்லும்.
முன்பெல்லாம் திருமணமென்றால் குழந்தைகள், பெரியோர் என அனைத்து வயதினரும் பங்குகொள்ளும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கும். எனவே, பல பதார்த்தங்களுடன் பெரிய விருந்து தேவையாக இருந்திருக்கலாம். இப்போது அப்படியா? 'சின்னவளுக்கு நாளைக்கு ஃபர்ஸ்ட் டெர்ம், பெரியவனுக்கு அடுத்த வாரம் 'கேட் எக்ஸாம்’, 'டான்ஸ் கிளாஸை விட்டுட்டு வரமாட்டேனுட்டா’, 'கிரிக்கெட் கோச்சிங் இருக்கு’ என்று ஏதாவது காரணங்களைச் சொல்லி, வீட்டுப் பிள்ளைகளை இம்மாதிரி விழாக்களுக்கு அழைத்துச் செல்வதே இல்லை பலரும். திருமணங்களுக்குப் பெரும்பாலும் வருவதெல்லாம் நடுத்தர வயதினரும் வயதானவர்களும். 'ஸ்வீட்டை கையிலே தொடக்கூடாதுனுட்டாரு டாக்டர்’, 'டயட்ல இருக்கேன்’ என்பது மாதிரி வரும் ஆட்களுக்காக எதற்கு இவ்வளவு உணவுப் பதார்த்தங்களை வீணாக்க வேண்டும்? இதில் வேடிக்கை என்னவென்றால், எதுவும் செட் ஆகாமல், கடைசியில் எல்லோரும் ஓடுவது... தயிர் சாதத்துக்குத்தான்!
திருமண விழாவை எளிமைப்படுத்தி, அத்தொகையை நல்ல விஷயங்களுக்கு செலவு செய்வதை ஃபேஷனாகக் கொண்டு வரலாமே!