யாருக்கோ ஏவப்பட்ட ஏவுகனை யாரயோ தாக்கியதுபோல கடந்த சில நாட்களாக சாமானிய மக்கள் தவிக்க நேர்ந்ததைப் பார்க்க முடிந்தது. நகர்ப்புறம் கிராமப்புறம் என வேறுபாடில்லாமல் எல்லொரையும் கவலைகொள்ள வைத்த விசயம் இது.
யாரைத் தாக்கவேண்டுமோ அவர்கள் வாய் மூடி மௌனமாக அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்க இதில் அதிகம் பயப்படத் தேவையில்லாத சிறு வியாபாரிகள் மற்றும் சாமானிய மக்களின் அன்றாட வாழக்கை ஒருசில நாட்களுக்கு பாதிக்கப்பட்டது உண்மை.
குடும்பத் தலைவிகள், விவசாயிகள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்களிலிருந்து தச்சு வேலை செய்பவர், பெயிண்டர், ப்ளம்பர், ட்ரைவரா கறுப்புப் பணம் வைத்திருப்போர் என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. அன்றையக் கூலியை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் செல்லும் பாதையிலேயே அந்தப் பணம் செல்லாதோ எனும் பயப்படுத்தும் தகவல் வெளியானது.
கறுப்புப் பணத்தை ஒழிக்க என மட்டுமல்ல ; எந்த ஒரு தீவிர நடவடிக்கையுமே இரு விதங்களில் எடுக்கலாம்:
1. Surgical Attack அல்லது டார்கெட்டட் அட்டாக்: அரசிடம் இருக்கும் தகவல்கள மற்றும் இண்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் அடிப்படையில் யார் குற்றவாளியோ அவரைக் குறிவைத்து கண்டுபிடித்து பொறிவத்துப் பிடித்து அவர்கள் மீது மட்டுமே கடும் நடவடிக்கை எடுப்பது; இதுதான் மிகச் சரியான நியாயமான நடவடிக்கையாக இருக்க முடியும். ஆனால் இதில் சில நடைமுறைச் சிக்கல்கள். சட்டபூர்வமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆயுட்காலமே முடிந்துவிடலாம். அந்த அள்விற்கு சட்டச் சிக்கல்கள், தாமதங்கள். இவை சரிசெய்யப்பட்டு ஃபாஸ்ட் ட்ராக் கோர்ட் மூலமாக நடவடிக்கைகள் எடுப்பதே “சர்ஜிகல் ஸ்ட்ரைக்”ஆக இருக்கமுடியும்.
2. Carpet Bombing அல்லது மொத்தமாக பொது நடவடிக்கை: இது அரசுக்கு ரொம்ப ஈஸியானது - ஆனால் மக்களுக்குத் தொல்லையானது. மேலே சொன்னதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்போது செய்திருக்கும் நடவடிக்கை என்பது அரசுக்குக் கொஞ்சம் சுலபமான நடவடிக்கை. ஒரே ஸ்ட்ரோக்கில் இந்தியாவில் ரொக்கமாக கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களில் பெரும்பகுதியினரைத் தாக்கி அவர்களை நிலைகுலைய வைத்திருப்பதோடு சாமானியர்களையும் தாற்காலிகமாகத் தாக்கியுள்ளது.
ஏற்கனவே பலமுறை இம்மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அவை பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்பது நிதர்சனம். மீண்டும் மீண்டும் கறுப்புப்பணப் ப்ரச்னை தலை தூக்குவது எதனால் என ஆராய வேண்டும்.
அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், மக்கள் மனோபாவம் மாறவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, சட்டப்படி வேறு சில நடவடிக்கைகள் மூலமாகவும் இதைக் கட்டுப்படுத்த முடியும்.
மக்களின் ஆதரவைக் கோருகிறது அரசு; ஆனால், இத்திட்டம் முழுமையாக வெற்றிபெற உண்மையிலேயே ஒத்துழைப்புத் தரவேண்டியவர்கள் பெரும் தொழிலதிபர்கள், சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுபவர்கள் மற்றும் அரசியல்வாதிகள்.
மக்களின் ஆதரவைக் கோருகிறது அரசு; ஆனால், இத்திட்டம் முழுமையாக வெற்றிபெற உண்மையிலேயே ஒத்துழைப்புத் தரவேண்டியவர்கள் பெரும் தொழிலதிபர்கள், சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுபவர்கள் மற்றும் அரசியல்வாதிகள்.
உண்மையிலேயே கறுப்புப்பணம் என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது? அது யாரிடம் அதிகம் இருக்கிறது? அதை முழுமையாகத் தடுக்க முடியுமா? அதற்குச் சிறந்த வழி இதுதானா? இதை ஒரு சேரப் புரிந்துகொண்டால்தான் இதன் தாக்கம் முழுமையாகப் புரியும்.
கறுப்புப் பணம் உருவாவது எப்படி? எங்கே?
1. சட்டத்துக்குப் புறம்பான தொழில்கள் மூலமாக :
a. கடத்தல்
b. தங்கம்
c. போதை மருந்து
2. சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் மூலமாக:
a. லஞ்சம்
b. ஒரு காரியத்தை முடித்துக்கொடுக்க அரசு அலுவலகங்களில்
c. அதே காரணத்துக்காக அரசியல்வாதிகளிடம்
3. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நியாயமாக நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில்கூட:
a. வரி ஏய்ப்பிற்காக பொய்ச் செலவுக் கணக்குகள் எழுதி வருமானத்தைக் குறைத்துக் காட்டுவதன் மூலமாக
b. லஞ்சம் கொடுப்பதற்காக வளியில் எடுக்கப்படும் பணம்
இப்படி இன்னும் பல விதங்களில் கறுப்புப்பணம் உருவாவதை அதன் ஊற்றுக்கண்னிலேயே தடுப்பதன் மூலமாகவே அதை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது என்பது ”சஸ்டெய்னபிள் பேஸிஸ்-ல்” சாத்தியமாகும்.
சர்வதேச அளவில், இப்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையை “டீ மானிட்டைசேஷன்” என்பார்கள். பொதுவாக இது “ஹைப்பர் இன்ஃப்ளேஷன்” எனச் சொல்லக்கூடிய அதீத பணவீக்கத்தால் அவதிப்படும் மூன்றாம் உலக நாடுகளில்தான் இது மாதிரி நடவடிக்கை பெரும்பாலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தாற்காலிகமாக, அங்கு விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அது அமையும்.
ஆனால், இங்கோ கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், அச்சடிக்கப்பட்ட போலிக் கரன்சி நோட்டுக்களை தவிர்க்கவும்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அரசு எதிர்பார்க்கும் தீர்வு இந்நடவடிக்கையால் மட்டும் கிடைக்குமா எனப் போகப்போகத்தான் தெரியும் என்றாலும், கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது என்பது நிச்சயம்.
இப்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையால், கையில் பெருமளவில் கறுப்புப்பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இச்செய்தி வெளியான அன்று ஆடிட்டர்கள் தொலைபேசி எல்லாம் ரெம்ப பிஸியானதிலிருந்தே இதைத் தெரிந்துகொள்ளலாம்.
இச்செய்தியை முன்கூட்டியே தெரிந்துகொண்டு உயர்மட்டத்தில் வெகு சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனும் ஊகங்களும் வெளியாகின. இதற்கான ஆதாரங்கள் ஏதும் வெளியில் வராதவரை இவை வெறும் ஊகங்களே. அப்படியே ஒருவேளை இருந்தாலும் அவை பெரும்பாலும் வெளியில் வராது என்பது தின்னம்.
அப்படியே ஒருசிலர் தப்பித்திக்கொண்டார்கள் என ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டால்கூட, அதற்காக இத்திட்டத்தைக் குறைகூற முடியாது. டிசம்பருக்குப் பின்னர் புள்ளிவிவரங்கள் வெளிவரும்போது இவை தெளிவாகும். முக்கியமான சில முடிவுகள் எடுக்கும்போது இப்படி நடப்பதை முன்பும் பார்த்திருக்கிறோம். அதற்காக ஒரு திட்டத்தைச் செயல்படுத்தாமலேயே இருக்க முடியாது.
ட்ரம்ப் வந்துவிடுவாரே எனப் பயந்து தேர்தலையே நடத்தாமல் இருக்கமுடியுமா? இல்லை, ஊழல்வாதிகளே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கி வருகிறார்கள் என வெறுத்துப்போய் தேர்தலே நடத்தாமல் ஓட்டுப்போடாமல் இருக்கலாமா?
இவ்விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே அரசு தீவிரமாகச் செயல்பட்டு வந்திருக்கிறது என்பது அடுத்தடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பார்த்தாலே புரியும்:
· கடந்த சில ஆண்டுகளாகவே கறுப்புப் பணத்தைச் தடுக்க தக்க நடவடிக்கை எடுப்போம் என அரசு தொடர்ந்து சொல்லி வந்தது.
· பேச்சோடு நிற்காமல் அதன் தொடர்ச்சியாக கறுப்புப்பணத்தைத் தடை செய்யும் சட்டம் கொண்டு வந்தது.
· பின்னர் ஏற்கனவே கறுப்புப் பணத்தைக் கையில் வைத்திருப்போருக்கான பொது மன்னிப்புத் திட்டமும் கொண்டுவந்தது. 45 % வரி கட்டி தப்பித்துக்கொள்ள வழிவகுத்தும்கொடுத்தது. ஏற்கன்வே ஒழுங்காக வரிக் கட்டி வந்தோரின் நியாயமான ஆதங்கத்தையும் கோபத்தையும் சம்பாதித்தாலும், ஓரளவுக்கு கறுப்புப்பணத்தை வெளிக்கொணர்ந்தது. அப்படிக்கொண்டுவந்ததன் மூலமாக அப்பணம் உற்பத்திக்கு மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்வகையில் வங்கிகளுக்குள் வந்தது.
· சென்ற ஆண்டுக்கான வருமான வரித்தாக்கல் செய்யும் காலக்கெடுவை வழக்கமான செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து அக்டோபர் 15-ம் தேதிக்குத் தள்ளிவைத்தது சிலரின் புருவத்தை உயர்த்த வைத்தது. கறுப்புப்பணத்தை வெளிக்கொணரும் திட்டத்திற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
· இப்போது இவற்றின் தொடர்ச்சியாகத்தான் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் திட்டத்தைக்கொண்டுவந்திருக்கிறது. ஆனால், பொது மன்னிப்புத் திட்டத்தில் பணம் வெளி வந்ததுபோல இதில் வருமா எனத் தெரியவில்லை. ஏன் எனில், இப்போது டெபாசிட் செய்யும் தொகக்கான கணக்குவழக்குகள் முறையாக இல்லாதபட்சத்தில், அப்பணத்தை முறையற்ற வருமானமாக எடுத்துக்கொண்டு அதன்மீது வழக்காமான வருமான வரிக் கட்டச்சொல்வதோடு, அதைப்போல 200%வரை - அதாவது இரு மடங்குவரை – அபராதத்தொகையும் கட்ட வேண்டிவரலாம் என எச்சரித்திருக்கிறார்கள்.
உதாரனமாக, இப்போது வங்கியில் கட்டும் ரூ. 10 லட்சத்துக்கு உங்களால் முறையாகக் கணக்குக் காட்ட முடியவில்லை என்றால் அது முழுவதுமே வருமானமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் மீது ரூ. 3 லட்சம் வருமான வரியும், அதுபோக ரூ. 6 லட்சம் அபராதத்தொகையும் வசூலிக்கப்படலாம். மீதம் ரூ. 1 லட்சம்தான் கையில் மிஞ்சும் சூழல் ஏற்படலாம்.
இதுவரை நியாயமாக வரிக்கட்டி வந்தவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை – தாற்காலிக சங்கடங்களைத் தவிர்த்து. கணக்கில் உள்ள பணம் எத்தன கோடிகளாக இருந்தாலும் பயப்படத் தேவையில். வங்கியில் பரிவர்த்தனை செய்யலாம்.
இந்த மொத்த முயற்சியும் வெற்றிபெற வேண்டுமென்றால் இத்தோடு நிறுத்தக்கூடாது. இப்போதை முயற்சி ஏற்கனவே இருக்கும் கறுப்புப்பணத்தைத்தான் ஓரளவுக்கு அழித்திருக்கும். ஆனால் இனி வருவது?
ஊற்றுக்கண்ணிலேயே தவிர்க்காவிட்டால் இப்போதைய நடவடிக்கை விரைவிலேயே நீர்த்துப்போகும். அதற்கு, ஒருபக்கம் போதை மருந்து, தங்கம் கள்ளக்கடத்தல் போன்ற சட்டத்திற்குப் புறம்பான தொழில்களைச் செய்பவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தணடனைகள் வழங்குவதோடு, மறுபக்கம் லஞ்சம், ஊழல் ஆகியவற்றில் ஈடுபடும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மீதும் கடும் நடவடிக்கைகள் பாயவேண்டும்.
கறுப்புப்பணம் உருவாவதைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அதன் பயன்பாட்டையும் செயலிழக்கச் செய்ய வேண்டும். அதற்கான முயற்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். அந்த விதத்தில், கறுப்புப்பணம் மேலும் புழங்கக்கூடிய இடங்களான தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளையும் மேலும் ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியமாகிறது.
சுமார் 25 ஆண்டுகள் முன்புவரைகூட பங்குச் சந்தைகளில் ரொக்கம் கட்டிப் பங்குகளை வாங்க முடியும். .ஆனால், இன்று முடியாது. பங்குச் சந்தைகளில் ஒரு ரூபாய் கூட ரொக்கமாக கட்ட முடியாது. காசோலை மூலமாகவோ வங்கிப் பரிவர்த்தனைகள் மூலமாகவோ மட்டுமே முடியும். இதன்மூலம் கறுப்புப்பணம் பெருமளவில் கட்டுக்குள் வந்தாலும், இன்று வேறு ஒரு ப்ரச்னை தொடர்ந்துகொண்டிர்க்கிறது. அதுதான் பார்ட்டிசிபேட்டரி நோட்.
”பார்ட்டிசிபேடரி நோட்” மூலமாக நம் நாட்டின் நிதி/ பங்குச் சந்தைக்குள் வரும் வரும் முதலீடுகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு கேய்மேன் ஐலேண்ட் எனும் இந்தச் சிறு தீவில் இருந்து வருவதாகச் சொல்கிறது எஸ்.ஐ.டி.! இது 2015-ம் ஆண்டு நிலவரம்.
வெறும் 55,000 பேர் மட்டுமே ஜனத்தொகையாகக் கொண்ட இத்தீவிலிருந்து நம் நாட்டிற்குள் வந்த முதலீட்டின் அளவு எவ்வளவு தெரியுமா ? ரூ. 85,000 கோடிகள்.!!! இதேபோல பனாமா நாட்டிலிருந்தும் இப்ரச்னை ! செபி அமைப்பு இப்போது சட்டதிட்டங்களைத் திருத்திக் கொஞ்சம் கடுமை காட்டியபின்னர் இந்த பண வரத்துக் கணிசமாகக் குறைந்திருந்தாலும், கடுமையான கண்கானிப்பும் தொடர் நடவடிக்கையும் தேவை.
”ரவுண்ட் ட்ரிப்பிங்” என்பார்கள்; இதன் மூலம் இந்தியர்களின் கறுப்புப்பணமே வெளிநாடு சென்று மீண்டும் இந்தியாவிற்குள் மறு சுழற்ச்சியில் வருகிறதோ எனும் அச்சத்தில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் செபி இதைத் தடை செய்தது. தடை செய்த செபியின் தலைவரின் பதவி காலம் முடிந்தவுடன் அவர் தூக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களிலேயே இத்தடை நீக்கப்பட்டது ஏன் என்பது இன்றுவரை புரியாத புதிர்!!! இனியாவது விரைவில் தடை செய்யப்படும் என நம்புவோம் !
இத்திட்டத்தின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது இது: பெரும் பண முதலைகள் யாரும் இந்தியாவில் பணத்தை வைத்திருப்பதில்லை. வாக்களித்தபடி/சொன்னபடி வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருக்கும் கறுப்புப்பணத்தை எடுத்து எங்கள் கணக்கில் வரவு வைப்பதை விட்டுவிட்டு செய்யப்படும் இந் நடவடிக்கை தேவையா? என்பது. உண்மைதான்.
ஆனால், ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். கறுப்புப்பணம் பற்றிய துல்லியமான புள்ளிவிவரங்கள் யாரிடமும் இல்லை – அரசு உட்பட. ஆளுக்கொரு புள்ளிவிவரங்களை அள்ளிவிடுகிறார்கள்.
கறுப்புப்பணத்தை எப்படியெல்லாம் வைத்திருக்க வாய்ப்புண்டு?
1. வெளிநாட்டு வங்கிகளில்
2. உள்ளூரிலேயே தங்கமாக
3. ரியல் எஸ்டேட்டில்
2. உள்ளூரிலேயே தங்கமாக
3. ரியல் எஸ்டேட்டில்
4. ரொக்கமாக
இதில் முதல் மூன்றுவிதமான கறுப்புப் பணமும் இப்போதைய நடவடிக்கையால் சரிசெய்யப்படுமா எனக் கேள்வி உள்ளது நிச்சயம். நான்காவதாகச் சொல்லப்பட்டிருக்கும் கையில் பதுக்கி வைத்திருக்கும் ரொக்கத்தை மட்டுமே இத்திட்டம் டார்கெட் செய்கிறது என்பது தெளிவு. ஏற்கனவே கொண்டு வந்த வாலண்டரி டிஸ்க்ளோஷர் திட்டம் மூலமாக மேற்சொன்ன வகைகளில் இருந்து கொஞ்சம் பணம் வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கலாம்.
சரி; கறுப்புப் பணத்தில் பெரும்பகுதி வெளிநட்டில் பதுக்கி வைத்திருக்கப்பட்டிருக்கலாம் என எண்ணப்படுகிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது நிச்சயம். அதற்க்காக அதைத் தவிர்த்து வேறு ஏதும் நடவடிக்கைகளே எடுக்ககூடாது என என்னுவது சரியான நடமுறையாக இருக்காது.
அதுமட்டுமல்ல; கறுப்புபணத்தை தங்கமாகவும் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து வைத்திருப்பவர்களும் ஏராளமாக இருக்கலாம். அவர்கள் மீதும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதைச் செய்யும்வரை இதைச் செய்யாதே எனச் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும்?
தங்கள் கைவசம் இருக்கும் கறுப்புப்பணத்தைப் பிரித்து தங்கள் உறவினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் மூலமாக வெள்ளைப் பணமாக மாற்றுவார்களே எனும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எல்லோராலும் முடியாத விஷயம் இது. நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் விஷயம் இது. இருந்தாலும் செய்யலாம். அதற்காகத்தான் அரசு, வருமான வரிச்சட்டத்தின் 270 ஏ ஷரத்தைப் பயன்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என அறிவித்துள்ளது.
இதையும் தாண்டி புதிய யுக்திகளைக் கண்டுபிடித்து சாமர்த்தியசாலிகள் சிலர் செயல்படலாம் என மத்ய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனே முன்னர் தெரிவித்திருந்ததாகச் செய்திகளையும் பார்த்தோம். எந்தச் சட்டம் கொண்டுவந்தாலும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்நடவடிக்கைகள் இருக்கவே செய்யும் என்பதால் அரசு சரி என நினைப்பதைச் செயல்படாமல் இருக்க முடியாது. அது சாமானிய மக்களுக்குத் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே இங்கு மிக முக்கியம்.
பணம் வைத்திருப்போரிடையே எத்தகைய பீதியைக் கிளப்பியது இத்திட்டம் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஒரு செய்தியைப் பாருங்கள்: இத்திட்டம் அறிவித்த அன்றுஇரவு தங்கத்தின் விலை இருமடங்காக அதிகரித்ததாகச் தகவல்கள் உலாவந்ததாகச் சொல்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். 10 கிராமுக்கு ரூ. 65,000/- கொடுத்து கறுப்புப்பணத்தை மாற்றியதாக தகவல்கள் சந்தையில் சொல்லப்பட்டது. அதைக் கட்டுப்படுத்தவும் அரசு உடனே நடவடிக்கையில் இறங்கியடு. பான் அட்டை இல்லாமல் தங்கம் விற்ககூடாது என சொன்னதோடு, சில ரெய்டுகளும் நடத்தப்படலாம் எனச் சொன்னது.
மேலே சொன்னதுபோல இது ஒரு இண்டெக்ரேட்டட் நடவடிக்கையாக ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்து அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று “சப்ளிமெண்டிங்”காக இருக்க வேண்டும். அப்போதுதான் இம்முயற்சி வெற்றிபெறும். இல்லையேல் இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட நடவடிக்ககளைப் போலத்தான் இதுவும் ஒரு தாற்காலிகப் பலனைக் கொடுக்கும்.
நம் நாட்டில் 5.50 கோடி சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இருப்பதாக அரசே சொல்கிறது. 8 கோடிப்பேருக்கு வேலை வாய்ப்புக்கொடுக்கும் துறையாகவும் இது இருக்கிறது. 6,000-க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டின் மொத்தப் பொருளாதார வளர்ச்சியில் இதன் பங்கு 8 % ஆக இருக்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 45 %-ம் மொத்த ஏற்றுமதியில் 45 % சிறுதொழில் நிறுவனங்களில் இருந்துதான் என அரசே ஒப்புக்கொள்ளும் விஷயம்.
அன்றாடப் பரிவர்த்தனைகளுக்கு ரொக்கத்தை மட்டுமே அதிகம் நம்பியிருக்கும் இவர்கள் கதி என்ன?
மெள்ள மெள்ள ரொக்கமில்லா சமூகமாக மாறுவதில் எங்களுக்கு எந்த மனத்தடையுமில்லை என சிறு தொழில்களுக்கான வர்த்தக சங்கத் தலைவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் ஒரே விஷயம் – இப்போதைக்கு இன்னமும் நாங்கள் அதற்குத் தயராகவில்லை என்பதுதான். இதை மெள்ள மெள்ளச் செயல்படுத்த வேண்டும் என்பது இவர்கள் கோரிக்கையாக இருக்கிறது.
குறிப்பாக கணவன் மனைவி என மொத்தக் குடும்பமே ஈடுபடும் குறு தொழில்களில் இச்சிக்கல் அதிகம். ஆனால், இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். அரசின் இப்போதைய நடவடிக்கை இவர்களுக்கு நிரந்தரமான எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். இப்போதைக்குக் கையில் இருக்கும் பழைய நாட்டுக்களைத்தான் வங்கிகளில் மாற்றச் சொல்லியிருக்கிறார்களே தவிர கரன்சியே புழங்ககூடாது என எங்கும் இதுவரை சொல்லவில்லை. ( இனிமேல் சொல்லலாமோ என்னவோ தெரியவில்லை! ). முறையாக ஈட்டிய பணத்திற்கு எந்தப் பயமும் தேவையில்லை.
வீட்டில் பெருங்காய டப்பாவில் இல்லத்தரசிகள் போட்டு வைத்திருக்கு சிறுவாட்டுப்பணம், சீட்டுக்கட்டி வந்த பணம் ஆகியவை அரசின் நோக்கமல்ல. இவர்கள் இப்பணத்தை முழுவதுமே தங்கள் வங்கிக் கணக்கில் போட்டிக்கொள்ளலாம்.
ஒரு சில ஆண்டுகள் முன்புவரை பலகோடிப்பேர்களுக்கு வங்கிக்கணக்கே இல்ல எனும் நிலை இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவருகிறது. இன்றும் பல கணக்கில்லாமல் இருந்தாலும் அவர்களையும் வங்கிக்கணக்கிற்குள் கொண்டுவரப்படவேண்டும் என்பதே அரசின் நோக்கம். உண்மையிலேயே தேவையானவர்களுக்கு மான்யங்கள் கொடுப்பதற்கும் வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் இது பயன்படும்.
வருமான வரித்துறை தேவையில்லாத தொல்லை கொடுக்குமோ என்ற அச்சம் மக்களிடையே இருப்பதை மறுப்பதற்கில்லை. இப்பயத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை.
லட்சக்கணக்கில் பணத்தைக் கையாளக்கூடிய வியாபாரிகள் – அவர்கள் யாராக இருந்தாலும், எந்தத் தொழிலில் ஈடுப்பட்டிருந்தாலும் – வங்கிக் கணக்கு மூலமாக பரிவர்த்தனை செய்வதை ஊக்குவிப்பதே இப்போது நடக்கிறது. இதன்மூலம் வரி ஏய்ப்பை கட்டுக்குள் கொண்டுவந்து அரசு வருவாயை அதிகரிப்பதன்மூலம் மக்கள் நலத்திட்டங்களை அதிகம் செயல்படுத்தலாம் என அரசு சொல்கிறது.
இங்குதான் மக்கள் வேறுபடுகிறார்கள். என்னிடம் வாங்கும் வரிக்கு எந்தவிதமான பலன் எனக்குக் கிடைக்கிறது என்பதைத் தெளிவாக்ச் சொல்லி நிரூபிக்க வேண்டும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் எங்கள் வரிப்பணம் போவது சரியா என நினைக்கிறார்கள். முறையாக இப்பணம் மற்றும் அதன் பல சாமானிய மக்களைப் போய்ச் சேரும்போது இக்கே:விகள் குறையும்.
நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ. எதிர்காலம் இதுதான். மெள்ள மெள்ள இதற்கு நம்மைத் தயார்படுத்திக்கொண்டால்தான் புத்திசாலித்தனம்.
இறுதியில் ஒன்று. இன்னும் ஓரிரு வாரங்களுக்குப் பின்னர் சாமானிய மக்கள் இதை மறந்து வேறு ஒரு ப்ரச்னைக்குக் கவனத்தைத் திருப்புவார்கள் என்பது நிச்சயம். அவர்களுடைய இன்றையக் கவலையை மனக் குமுரலை தொலைக்காட்சிகளில் செய்தித்தாள்களில் அவர்கள் கொட்டிவிட்டார்கள். அப்படி ஒப்பனாக மனம் திறந்து பேசமுடியாமல் வாய்மூடி இருப்பவர்களை நினைத்தால்தான் இத்திட்டத்தின் உண்மையான வெற்றி புரியும்.
இத்திட்டத்தின் மூலமாக எல்லாக் கறுப்புப் பணமும் உள்ளே வராமற்போகலாமென்றாலும் உள்ளே பல ஆயிரம் கோடிகள் வரலாம் எனும் எதிர்பார்ப்பு உள்ளது. வங்கிகளுக்குள் இப்பணம் வரும்போது CASA எனச் சொல்லக்கூடிய கரண் அக்கவுன் மற்றும் சேவிங்க்ஸ் அக்கவுண்டிற்குள்தான் முதலில் வரும். வங்கிகளுக்கு மூலதனம் நம் கொடுக்கும் பணம்தான்.
அதை நாம் ஃபிக்ஸட் டெபாசிட்டாகப் போடும்போது நமக்கு 7 அல்லது 8 % வட்டி கொடுக்கப்படும் வங்கிகளின் மூதனப்பொருளின் அடக்க விலை அதிகம். அதையே நாம் “காஸா” கணக்குகளில் போடும்போது 3 % அல்லது 4 % தான் அதன் அடக்க விலை.
எனவே பொதுவாகவே வங்கிகள் “காஸா” கணக்குகளையே விரும்புவார்கள். குறைந்த வட்டியில் பணம் வாங்கி அதைக் கடன் கொடுக்கும்போது வங்கிகள் ஈட்டக்கூடிய “நிம்” NIM – Net Interest Margin மற்றும் NII – Net Interest Income எனும் வருவாய் மற்றும் லாபம் கணிசமாக வரும் ஆண்டுகளில் உயரும். பொதுத்துறை வங்கிகளுக்குக் குறிப்பாக இது நல்லது – பெரும்பாண்மையான செமிப்பு இங்குதான் வரும் என்பதால்.
பாரலல் எக்கானமியில் இருந்து பணம் வங்கிகள் மூலமாக வரும்போது இப்போது தாற்காலிகமாக உருவாகிவரும் பணத்தட்டுப்பாடு குறைந்து பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அப்படிப் பணப்புழக்கம் அதிகரிக்கும்போது. அதன் காரணமாக வட்டி விகிதம் கணிசமாகக் குறையும். வீட்டுக்கடன் வாகனக்கடன் மற்று சிறு தொழில்கள் கடன் மீதான வட்டியும் குறைய வேண்டும்.
அதோடு நிற்காது இதன் பலன் – இத்திட்டங்கள் வெற்றிபெறும்பட்சத்தில். நம் நாட்டின் பற்றாக்குறையும் கணிசமாகக் குறையலாம் ( 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ. 3 ட்ரில்லியன் குறையும் எனச் சொல்கிறது ”ஈடெல் வெய்ஸ்” நிறுவனத்தின் ஆய்வு; ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சொல்கிறது: ரூ. 4.60 ட்ரில்லியன் அளவுக்கு கறுப்புப் பணம் ரொக்கமாக உள்ளே வருவதால் நாட்டின் பற்றாக்குறை அந்த அளவுக்குக் குறையும் எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறது! ) .
இப்பணம் முழுவதும் கல்வி, மருத்துவம், விவசாயம், பாதுகாப்பு என மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் பட்சத்தில், மக்களின் கேள்விகள் முறையாகப் பதிலளிக்கப்படும். ஒருபக்கம் பற்றாக்குறை குறைவு மறுபக்கம் வட்டி விகிதம் குறைவு என்பதால், விலைவாசியும் கணிசமாகக் குறையும். இதுதான் சாமானிய மக்கள் விரும்புவது. நடக்குமா என்பது இம்ப்ளிமெண்டேஷனில் உள்ளது.
( நன்றி: ஆனந்த விகடன், ஓவியர்கள், சோஷியல் மீடியா மூலமாக பொது வெளியில் பகிரப்பட்ட சில படங்கள் - யாரோ ஆகியோருக்கு. )
( நன்றி: ஆனந்த விகடன், ஓவியர்கள், சோஷியல் மீடியா மூலமாக பொது வெளியில் பகிரப்பட்ட சில படங்கள் - யாரோ ஆகியோருக்கு. )
This effort should not be looked at in isolation. It is a and should be a part of a well-integrated move to ban/control black money and Government should see to that the continuous effective follow-up actions - without affecting the day to day life of the common man or with least inconveniance – to ensure this success. Otherwise, this will also become one more political strategy as in the past. After going through such pain, India and the Common Man cannot afford it at this stage.