Wednesday, July 30, 2014

ஒன்றுமே வாங்காத நாள்..!

வி.நாகப்பன்

சென்ற இதழ் “அவள் விகடன்”-ல் வெளியான என் கட்டுரை

Freeganism & Buy Nothing Day !

'பை நத்திங் டே' (Buy Nothing Day -BND) என்றால் தெரியுமா?!
'எதுவுமே வாங்காமல் இருப்பதற்கான நாள்’ எனப்படும் இந்த 'பை நத்திங் டே', மெட்டீரியலிஸம் மற்றும் அதீத நுகர்வு கலாசாரத்துக்கு எதிரான முழக்கங்களுடன் சர்வதேச அளவில் இப்போது பிரபலமாகி வருகிறது. அமெரிக்காவில், நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழனன்று 'தேங்க்ஸ் கிவிங் டே’. இதற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமையன்று 'பை நத்திங் டே’ கொண்டாடப்படுகிறது.


தேவைக்கு அதிகமாக நுகர்வதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதகங்களையும், அதனால் பலனடைவது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் என்பதையும் மக்களுக்கு உணர்த்த, 92-ம் ஆண்டு துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நாள். உபரித் தேவைகளைக்கூட அத்தியாவசியத் தேவைகளாக நினைக்கும்படியாக நியாயப்படுத்தி, நம்மை அதிகமாக செலவுசெய்யத் தூண்டி, கடனாளியாக்கி லாபம் பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்களின் வியா பாரப் போக்கை எதிர்த்து, இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பூமியின் இயற்கை வளங்கள், 20% மக்களால் சுரண்டப்படுவதால் ஏற் படும் பாதிப்பை வெளிக் கொணர்வதும் இதன் நோக்கங்களுள் ஒன்று!

எப்படிக் கொண்டாடுவது இந்த நாளை?
திருவிழாவை எப்படிக் கொண்டாடுவது என்பதை, உலகுக்கே வகுப்பெடுப்போம் நாம். தீபாவளி, பொங்கல் என்றால் புதுத்துணி, நகை, ஷாப்பிங் என ஒவ்வொரு ஊரின் கடைவீதியுமே அல்லோலகல்லோலப்படும். ஆனால், நுகராதோர் தினம் அன்று எதுவுமே வாங்காமல் எப்படிக் கொண்டாடுவார்கள்?
பெரிய ஷாப்பிங் மால்களில் நடுவில் நின்று கிரெடிட் கார்டுகளை வெட்டிப்போடுவது, கடைகளில் ஷாப்பிங் டிராலிகளைத் தள்ளிக்கொண்டு/கூடைகளைக் கையில் எடுத்துக்கொண்டு ஒன்றும் வாங்காமல் ஊர்வலம்போல ஒருவர் பின் ஒருவராகச் செல்வது, இக்கருத்தை வலியுறுத்தும்விதமாக சாலையோர நாடகங்கள் நடத்துவது, இயற்கையைக் கொண்டாடும் விதமாக மலையேற்றம் என கைக்காசை செலவழிக்காமல் அன்றைய தினத்தைச் செலவிடுவது இவர்கள் வாடிக்கை.

மெட்டீரியலிஸ்டிக் உலகம் என்கிற மாயவலை!
பிரபலமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரை மாடல்களாகப் போட்டு கவர்ச்சிகரமான தொடர் விளம்பரங்கள் மூலமாக நம்மையும் நம் குடும்பத்தையும் மூளைச் சலவை செய்யும் இந்நுகர்வு கலாசாரம், மிக ஆபத்தானது. அலசி ஆராய்ந்து, 'நமக்கு இது அத்தியாவசியத் தேவை இல்லை, வாங்க வேண்டாம்’ என நம் அறிவு சொல்லும் ஒரு விஷயத்தை, இம்மாதிரி விளம்பரங்கள் மூலமாக நம் மனதை இளக்கி, சரி என நியாயப்படுத்த வைக்கிறார்கள்.
'மாற்றினால்தான் நீ மாடர்ன் மனிதன்’ கொள்கை!
அடுத்ததாக, தேவை இல்லாத பொருட்களை வாங்குவதுடன், அதையும் அடிக்கடி மாற்றுவது.  
முன்பெல்லாம் கைக்கடிகாரம் வேண்டுமென்றால், குறைந்தபட்ச தகுதி நாம் வேலைக்குப் போகத் துவங்க வேண்டும். கொஞ்சம் பணக்கார வீடுகளில் மட்டும் கல்லூரிக்குச் செல்லும்போது கைக்கடிகாரம் கிட்டும். அந்தக் கைக்கடிகாரம்தான் நம் வாழ்நாளெல்லாம். அடிக்கடி மாற்றுவதெல்லாம் முடியாது. சிலருக்கு திருமணத்தின்போது மாமனாரிடம் இருந்து கிடைக்கும் வாட்ச்தான் இரண்டாவது. இதைத் தவிர, பள்ளிக் காலங்களில் எல்லாம் திருவிழா பொம்மைக் கடிகாரம்தான்!
ஆனால் இன்று..? 'இந்த வாட்ச் வாங்கி ரெண்டு வருஷம் ஆச்சுப்பா... மாத்தணும்...’ என்று ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படிக்கும் வாண்டுகள்கூட சர்வசாதாரணமாக பேசுவதை, மிடில் கிளாஸ் வீடுகளிலேயே கேட்க முடிகிறது. எதற்காக மாற்ற வேண்டும்? 'எத்தனை நாள் ஒரே கடிகாரத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கிறது... போரடிக்குது...’, 'புதுசா ஒரு மாடல் வந்திருக்கு’, 'அந்த விளம்பரம் நல்லா இருந்தது’ என இந்த அநியாயச் செலவை, நியாயப்படுத்துகிறோம்.
உண்மையைச் சொல்லப்போனால், செல்போன் வந்த பின்னர் பெரும்பாலானவர்கள் மணி பார்ப்பது அதில்தான். ஆக, தேவையில்லாத, பயன்பாடு இல்லாத ஒரு பொருளை வாங்குவதோடு மட்டுமல்லாமல், அதை அடிக்கடி மாற்றும்படியும் தூண்டப்படுகிறோம்.
கைக்கடிகாரம் துவங்கி, தொலைக்காட்சிப் பெட்டி, செல்போன், டூ-வீலர் என இப்படிப் பல பொருட்களை சொல்லிக்கொண்டே போகலாம். நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் பைக்கை கூட மாற்றுவோம்... புது மாடல் வந்துவிட்டால்! மைலேஜ் சரியில்லை என நியாயப்படுத்துவோம். புது மாடல் செல்போனைப் பார்த்தவுடன் பழைய மாடல் கசக்கத் துவங்கும். 'ச்சே... வரவர ரொம்ப ஸ்லோ ஆயிடுச்சி, அடிக்கடி ஹேங் ஆகுது இப்பெல்லாம்’ என அலுத்துக்கொள்வோம். உண்மையைச் சொல்லுங்கள்... அதுவா காரணம்? நாம் புதிதாக வாங்கும் போனிலும் இப்பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும் என்பது நமக்குத் தெரியும்தானே?
ஒருவகையில் பார்த்தால், இது... சமூகரீதியாக நடக்கும் உளவியல் தாக்குதலும்கூட! இந்த அதீத நுகர்வு கலாசாரத்தின் தாக்கம்/தாக்குதல் நம் ஒட்டுமொத்த குடும்ப அமைப்பின் மீதுதான். அமைதி கெடவும், குடும்பங்கள் பிளவுபடவும்கூட இக்கலாசாரம் வழிவகுக்கிறது.

காசேதான் கடைசியடா!
சரி, என்னதான் செய்வது என்கிறீர்களா? அதைச் சொல்வதற்கு முன்பாக, ஃப்ரீகனிஸம் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
ஃப்ரீகனிஸம் (Freeganism) என்பது, காசில்லா வாழ்க்கை. அதாவது, கையில் காசே இல்லைஎன்றாலும் நம்மால் வாழ முடியும் என்ற வாழ்க்கையை முறையை வலியுறுத்தும் கொள்கை. இது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் சமீபகாலமாக பிரபலமாகி வரும் புதிய கலாசாரம். சென்ற ஆண்டு வெளியான 'ஈஸ்ட்’ எனும் ஆங்கிலப் படத்தின் இயக்குநரும் கதாசிரியரும், சில நாட்களுக்கு இப்படிச் செலவில்லாத வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்துப் பார்த்தனர். கையில் காசில்லாமல் என்றால், சாப்பாட்டுக்கு? இருக்கவே இருக்கிறது, 'ஃப்ரீகனிஸம்’.
இது என்ன புது இஸம்?
அதாவது, அடுத்தவர் வேண்டாம் எனக் குப்பையில் தூக்கி எறியும் உணவை எடுத்துச் சாப்பிடுவது. இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். இவர்கள் எடுத்துச் சாப்பிடுவது கெட்டுப்போன உணவை அல்ல, பணத்திமிர் பிடித்து தேவைக்கு அதிகமாக ஒருவர் வாங்கும் உணவில் அவர் சாப்பிட்டது போக தூக்கி எறியும் மீதத்தைத்தான் இவர்கள் எடுத்துச் சாப்பிடுகிறார்கள்!
'ஈஸ்ட்’ படத்தின் தாக்கமும் இதுவே. இப்படத்தில் வரும் 'ஈஸ்ட்’ அமைப்பின் உறுப்பினர் லூகா, அப்படிப்பட்டவன். சாலையோரக் குப்பைத் தொட்டிகளில் இறங்கி மிகுந்தவற்றை எடுத்துக் கொஞ்சம்கூடக் கூச்சமில்லாமல் சாவதானமாக உண்பதைப் பார்க்கும்போது, முதலில் அருவருப்பாகவும், வித்தியாசமாகவும் இருக்கலாம். ஆனால், அதன் பின்னால் உள்ள கொள்கை மிக முக்கியமானது; அழகானது.
எதுவும் வீணாகக் கூடாது, கெட்டுப்போனால் ஒழிய. அது எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பலன் அளிக்கக் கூடியதுதான். தூக்கி எறிந்து வீணாக்குவதால், சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவது அதிகமாகிறது. இப்படித் தூக்கியெறியப்படும் பொருட்களை வைத்தே வாழ்க்கையை ஓட்டும் முறையை தானாக முன்வந்து தேர்ந்தெடுத்துக் கொள்பவர்கள், 'ஃப்ரீகன்ஸ்’. அதீத நுகர்வுக் கலாசாரத்துக்கு எதிராக இதற்கு மேல் ஒரு விஷயத்தைச் சொல்வது கடினம்.
நடைமுறை வாழ்க்கையில், நாமெல்லாம் 'ஃப்ரீகன்ஸ்’ ஆக மாறுவது சாத்தியமில்லைதான். ஆனால், அதன் அடிப்படைக் கோட்பாட்டைப் புரிந்துகொண்டு, அத்தியாவசியத் தேவையை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு, தேவைக்கு மேல் நுகர்வதைக் குறைத்து, எதையும் வீணாக்காமல், அடுத்தவருக்குப் பயன்படும்படி செய்வோமானால், அது போதுமே இப்போதைக்கு!


எளிமையே... இனிமை!
ஆடம்பரங்களைத் தவிர்த்து, எளிய செலவுகளாலும், அன்பான விருந்தோம்பலாலும் உங்கள் இல்ல விழாவை அழகாக நடத்தியவரா நீங்கள்... எதிர்காலத்தில் நடத்த இருப்பவரா... இதை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளலாமே! சுருக்கமாக, அதேசமயத்தில் தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். பிரசுரமாகும் 'எளிமை'க்கு தகுந்த பரிசு உண்டு!
அனுப்ப வேண்டிய முகவரி: 'எளிமையே... இனிமை’, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002


வேஸ்ட்டாகும் காஸ்ட்லி விருந்து!
ழை நாடாக (அல்லது வளர்ந்து வரும் நாடு) கருதப்படும் நம் இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் வீணடிக்கப்படும் உணவின் அளவு மிக அதிகம். பெருமைக்காக வீண் செலவு செய்வதில் நமக்கு நிகர் நாம்தான். பாதி உணவு குப்பைத் தொட்டிக்குத்தான் செல்லும்.
முன்பெல்லாம் திருமணமென்றால் குழந்தைகள், பெரியோர் என அனைத்து வயதினரும் பங்குகொள்ளும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கும். எனவே, பல பதார்த்தங்களுடன் பெரிய விருந்து தேவையாக இருந்திருக்கலாம். இப்போது அப்படியா? 'சின்னவளுக்கு நாளைக்கு ஃபர்ஸ்ட் டெர்ம், பெரியவனுக்கு அடுத்த வாரம் 'கேட் எக்ஸாம்’, 'டான்ஸ் கிளாஸை விட்டுட்டு வரமாட்டேனுட்டா’, 'கிரிக்கெட் கோச்சிங் இருக்கு’ என்று ஏதாவது காரணங்களைச் சொல்லி, வீட்டுப் பிள்ளைகளை இம்மாதிரி விழாக்களுக்கு அழைத்துச் செல்வதே இல்லை பலரும். திருமணங்களுக்குப் பெரும்பாலும் வருவதெல்லாம் நடுத்தர வயதினரும் வயதானவர்களும். 'ஸ்வீட்டை கையிலே தொடக்கூடாதுனுட்டாரு டாக்டர்’, 'டயட்ல இருக்கேன்’ என்பது மாதிரி வரும் ஆட்களுக்காக எதற்கு இவ்வளவு உணவுப் பதார்த்தங்களை வீணாக்க வேண்டும்? இதில் வேடிக்கை என்னவென்றால், எதுவும் செட் ஆகாமல், கடைசியில் எல்லோரும் ஓடுவது... தயிர் சாதத்துக்குத்தான்!
திருமண விழாவை எளிமைப்படுத்தி, அத்தொகையை நல்ல விஷயங்களுக்கு செலவு செய்வதை ஃபேஷனாகக் கொண்டு வரலாமே!

Tuesday, June 10, 2014

தி ஈஸ்ட் - பசுமை விகடனில் என் கட்டுரை !




கிழக்குதெ ஈஸ்ட்

இந்த உலகை ஆள்வது யார்? வழிநடத்துவதும் கட்டுக்குள் வைத்திருப்பதும் யார்? அமெரிக்கா என்று சொன்னால் நீங்கள் ஐயோ பாவம்!

நள்ளிரவு; இருட்டு. ஒரு பெரிய வீடு. சுற்றி வளைக்கிறது சிறிய கும்பல் ஒன்று. வீட்டைச் சுற்றி கச்சா எண்ணை மற்றும் பெட்ரோலியக் கழிவுகளை ஊற்றுகிறது. வீட்டினுள் படுத்திருப்பவர் லேசாக சத்தம் கேட்டு புரண்டு படுக்கிறார். சற்று நேரத்தில் வீடு தீ பிடித்து எரிகிறது. ப்ரம்மாண்டமாக வெடித்துச் சிதறுகிறது. யார் இவர்? ஏன் எரிக்கப்பட்டது இவர் வீடு?

மறுநாள் தொலைக்காட்சிகளில் இதுதான் செய்தி: “ஒரு சில நாட்களுக்கு முன்பு கடலில் பெட்ரோலிய எண்ணை கலந்ததால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டது. அதன் காரனமாக பல பறவைகளும் கடல் வாழ் உயிரினங்களும் அழிந்தது நமக்குத் தெரியும். இதற்குக் காரனமான நிறுவனத்தின் தலைவர் வீடு நேற்று இரவு வெடித்துச் சிதறியது. இதற்குக் காரனமானவர்கள் யார் என இன்னும் தெரியவில்லை

விசாரனை முடிக்கிவிடப்படுகிறது; பெரிய தொழில் நிறுவனத்தின் தலைவர் அல்லவா? ஆனால், வழக்கமாகப் பணத்திற்காக இச்செயல்களைச் செய்யும் யாரும் இல்லை எனத் தெரியவருகிறது. தொழில் முனை போட்டியாளர்களும் இல்லை என்பது உறுதியாகிறது. அப்படியானால் யார்?

இரகசிய விசாரனையில், தன்னைஈஸ்ட்என அழைத்துக்கொள்ளும் ஒரு தீவிரவாத அமைப்புதான் எனத் தெரிய வருகிறது. எதற்காக அவர்கள் இதைச் செய்தார்கள்? பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான தீவிரவாதிகளோ இவர்கள் என்ற என்னம் ஏற்படுகிறது. இத்தோடு அவர்கள் இதை நிறுத்திக்கொள்ளப்போவதாகவும் தெரியவில்லை. மேலும் இதுபோன்ற தீவிர நடவடிக்கைகள் தொடரலாம். அவர்களின் அடுத்த இலக்கு யார்? என்ற கேள்விகளோடு துவங்குகிறது படம்.



அடுத்த காட்சியில் இக்கதையின் நாயகிஜேன்அறிமுகமாகிறார். இவர் வேலை செய்வதுஹில்லர் ப்ரூட்எனும் தனியார் உளவு நிறுவனம். கார்பரேட் சாம்ராஜ்யங்களுக்கு ஊழியம் செய்பவர்கள். இதன் தலைவி ஷரோன். தங்களுக்கு எதிராகச் செயல்படும் ஈஸ்ட்”-ஐக் கண்டுபிடித்து ஒழிப்பதற்காக கார்பரேட்டுகளின் திட்டத்தின் ஒரு அங்கமாக, அந்த அமைப்பிற்குள் மெள்ள ஊடுருவும் பொறுப்பு ஜேன்-னுக்குக் கொடுக்கப்படுகிறது.

கடும் முயற்சிக்குப்பின், சாரா எனும் புதுப் பெயருடன் இக்குழுவுக்குள் ஊடுருவுகிறார் ஜேன். ஆளில்லாக் காட்டுக்குள் சாராவைக் கண்ணைக் கட்டை அழைத்துச் செல்கிறான் அக்குழுவைச் சேர்ந்த லூக்கா. அக்குழுவின் தலைவன்பெஞ்சி”. அங்கு, சில சோதனைகளுக்குப் பின்னர் சாராவும் அக்குழுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார். அடிபட்ட அவளுக்கு வைத்தியம் பார்க்கிறார் அங்கிருக்கும் ஒரு டாக்டர். அப்போது டாக்டரின் கை அவ்வப்போது நடுங்குவதைப் பார்க்கிறாள்.

அப்போது டாக்டர் சொல்லும் விவரத்திலிருந்து இக்குழுவின் ஒவ்வொரு அங்கத்தினரும் பெரிய கார்பரேட்டுக்களின் அநியாய நடவடிக்கைகளால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப் பட்டவர்கள் என்பதை அறிகிறாள்.

அடுத்த தாக்குதல் எங்கே என விவாதிக்கிறார்கள்; அதில் சாரா-வையும் சேர்த்துக்கொள்வதா வேண்டாமா என நீண்ட விவாத்த்திற்குப் பின்னர் சேர்த்துக்கொள்ளப்படுகிறார். டாக்டர், பெஞ்சி, இக்குழுவின் மற்றொரு உறுப்பினரானஇஸ்ஸிமற்றும் சாரா ஆகியோர் ஒரு டின்னருக்குச் செல்கிறார்கள்.

ஒரு மிகப்பெரிய பன்னாட்டு ஃபார்மா நிறுவனம் தனது புதிய மருந்தை சந்தையில் அறிமுகப்படுத்தும் கொண்டாட்ட விழா அது. அங்கு வரும் டாக்டர், யாருக்கும் தெரியாமல் ஷாம்பெயினில் எதையோ கலந்து எல்லோருக்கும் கொடுப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள் சாரா. அது விஷமாக இருக்கலாம் அனப் பயந்து தன் நிறுவனத் தலைவி ஷரோநைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறாள். இக்குழுவின் ஒரு அங்கமாக இப்போது தான் நடிப்பதால் தன்னால் எதுவும் இப்பொது செய்ய முடியாதாகையால், போலீசுக்குத் தகவல் தெரிவித்து இவர்களிக் காப்பாற்றுமாறு ஷரோனிடம் இறஞ்சுகிறாள் சாரா. ஆனால், ஷரோனோ. இவ்விருந்து கொடுக்கும் ஃபார்மா நிறுவனம் தனது வாடிக்கையாளர் அல்லவென்றும், அதனால் தனக்கு எந்த லாபமும் இல்லையாகையால் தான் எதுவும் செய்யப்போவதில்லை என இறக்கமில்லாமல் சொல்கிறாள்.

விருந்து முடிந்து திரும்பவும் மறைவிடத்திற்கு வரும் வழியில், எப்படி இவ்வளவு உயிர்களையும் கொல்லலாம் என டாக்டருடன் வாதிடுகிறாள் சாரா. அப்போதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயத்தை வெளியிடுகிறார் டாக்டர். அந்த விருந்தில் தான் கலந்த்து விஷம் அல்ல; அதே நிறுவனம் தயாரிக்கும் ஃப்லோரோக்வினோலோன்எனும் ஆண்டிபையாட்டிக் மருந்தைத்தான் எனச் சொல்கிறார்.

அக்கம்பெனி சந்தையில் விற்கும் மருந்து முறையான ஆய்வுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது அல்ல என்றும் அதன் பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கிறான். உனக்கு எப்படித் தெரியும் என சாரா கேட்கவும், அந்த மருந்தால் பாதிக்கப்பட்டவன் தான் என்றும் அதனால்தான் அவ்வப்போது தனக்கு வலிப்பு வருவதாகவும் சொல்கிறார் டாக்டர்.

டின்னர் முடிந்து வந்த மறுநாள் அந்நிறுவனத்தின் கவனத்திற்கு இச்செயல் கொண்டுவரப்படுகிறது. அதைப் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல், ”பாருங்கள் இந்த மருந்து எங்களை ஒன்றும் செய்யவில்லைஎன அந்நிறுவனத் தலைவி பேட்டி அளிக்கிறாள் தொலைக்காட்சியில். ஆனால், ஒரு சில நாட்களைலேயே அவளையும் பக்கவாதம் தாக்குகிறது. நரம்புத் தளர்ச்சியுடன் தொலைக்காட்சியில் தோன்று உண்மையை ஒப்புக்கொள்கிறாள் மன்னிப்புக் கேட்கிறாள். ஈஸ்ட்-டிற்கு மற்றுமொரு வெற்றி.

தான் வந்த நோக்கம் மறந்து, ஈஸ்ட்-டின் நியாயங்களைப் புறிந்து அதன் ஒரு அங்கமாக தான் மாறிக்கொண்டிருக்கிறோமோ எனும் சந்தேகம் அவ்வப்போது வருகிறது சாராவுக்கு. ஷரோன் தன் தகவல்களை நன்றாகப் பயன்படுத்தி கார்பரேட் நிறுவனங்களிடம் காசு பார்ப்பதும் புறிகிறது. இதற்கிடையில் இக்குழுவின் தலைவன் பெஞ்சியின் மீதும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.


ஈஸ்ட்-டின் அடுத்த தாக்குதல் ஒரு பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் மீது என முடிவாகிறது. அந்த ஊரின் முக்கிய நீர் நிலையில், நள்ளிரவிற்குப் பின்னர் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய கழிவுகளைக் கலக்கிறது அந்நிறுவனம். மாசுபட்ட நீரால், அவ்வூர் மக்கள் பல்வேறு அவஸ்தைக்குள்ளாகிறார்கள். நேய் எத்ரிபு சக்தி குறைகிறது. ஈஸ்ட்-டின் ஒரு முக்கிய அங்கத்தினரானஇஸ்ஸி”-யின் தந்தைதான் அந்நிறுவனத்தின் தலைவர் என்பது சாராவுக்குத் தெரிய வருகிறது.

இஸ்ஸி மூலமாக நைச்சியமாகப் பேசி அவள் தந்தையை அந்த நீர் நிலைக்கு அழைத்துவரச் செய்து அவரையும் அதன் இன்னொரு தலைவியையும் அந்த விஷ நீரில் குளிக்குமாறு துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்துகின்றனர். முதலில் நீரில் கழிவுகளைக் கலக்கவில்லை எனப் பொய் சொல்லும் அவவர்கள், நள்ளிரவுக்குப் பின்னர் தொழிற்சாலையில் இருந்து கழிவுகள் கொட்டத் துவங்கியவுடன் குட்டு வெளிப்பட தன்னீருள் அமிழ்த்தப்படுகிறார்கள். அதற்குள் பாதுகாவலர்கள் துரத்த, நடக்கும் துப்பாக்கி சண்டையில் இஸ்ஸி காயத்துடன் தப்பிக்கிறாள்.

மீண்டும் காட்டுக்குள் பதுங்குகிறார்கள்; ஏற்கனவே சாப்பிட்ட மருந்தின் கடுமையான பக்க விளைவால், டாக்டரின் நடுக்கம் அதிகமானதால் குண்டடிபட்ட இஸ்ஸி-க்கு ஆப்பரேஷன் செய்து குண்டை வெளியே எடுக்க முடியாமற் போகிறது. இஸ்ஸி இறக்கிறாள். இதனால், குழுவில் பிளவு ஏற்படுமோ என அஞ்சும் அளவுக்கு விவாதம் நடக்கிறது. கடும் வாய்ச் சண்டைகளுக்குப் பின், இன்னும் ஒன்றே ஒன்று இறுதியாகச் செய்துவிட்டு நாம் பிரியலாம் என முடிவு எடுக்கிறார்கள்.


கடைசி தாக்குதல் பற்றி சொல்கிறேன் என சாராவை தனது காரில் அழைத்துக்கொண்டு போகிறான் பெஞ்சி. அவன் காரைக் கடைசியில் நிறுத்தும் இடத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் சாரா. அது ஹில்லர் ப்ரூட்ஸ்சாராவின், அதாவது ஜேன்- ன் அலுவலகம் ! சாராதான் ஜேன் என லூகா-வுக்கு சந்தேகம் இருந்த்தாகவும், தான் அதை பின்னர் உறுதி செய்துகொண்டதையும் பெஞ்சி விளக்குகிறான். கடைசித் தாக்குதல் என்ன என விவரிக்கிறான்.

கார்பரேட்டுகளுக்கு உதவியாக உளவு செய்யும் ஜேன் போன்ற ஹில்லர் ப்ரூட்ஸ்-சின் உளவாளிகளின் இரகசியப் பட்டியலை எப்படியாவது கொண்டுவர வேண்டும் எனக் கேட்கிறான். இதற்கு முதலில் மறுக்கும் ஜேன், இப்பட்டியலை வைத்துக்கொண்டு என்ன செய்வாய் எனக் கேட்கிறாள். ஷரோனுக்காக கூலிக்கு மாரடிக்கும் அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் வேலை அல்லவா என்கிறாள். அப்பட்டியல் கையில் கிடைத்தால் அவர்களைக் கண்கானித்து அவர்கள் செயல்பாடுகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பேன் என்கிறான் பெஞ்சி.

தன் அலுவலகத்துக்குள் நுழைந்து ஷரோனின் அறைக்குச் செல்கிறாள் ஜேன். அங்கு ஷரோன் இல்லை. அவள் கம்ப்யூட்டரில் இருந்து உளவாளிகளின் முழுத் தகவலையும் தன் கை ஃபோனில் இருக்கும் சிப்-பில் பதிவு செய்கிறாள். வெளியேறும்போது ஷரோனைப் பார்க்கிறாள். அவளின் நடவடிக்கைகளை வெளிப்ப்டையாக விமர்சனம் செய்கிறாள். லிஃப்டில் இறங்கி அலுவலகத்திவிட்டு வெளியேற இருக்கையில், செக்யூரிட்டியிடம் சொல்லி அவளது ஃபோனைப் பறிமுதல் செய்கிறாள் சந்தேகப்பட்ட ஷரோன்.

இதற்கிடையே, ஷரோன் தன் கைவசமுள்ள தகவல்களை எஃப்.பி..-யிடம் அளிக்க அவர்கள காட்டுக்குள் சென்று ஈஸ்ட்-டின் மறைவிடத்தைத் தகர்த்து எறிகிறார்கள். சிலர் மட்டு தப்பிக்க டாக்டர் மட்டும் மாட்டிக்கொள்கிறார். இத்தகவல் பெஞ்சிக்கு கிடைக்கவும் ஆத்திரமாகிறான். ஜேன் கொண்டுவரும் தகவலில் உள்ள உளவாளிகளைப் பழிவாங்க முடிவெடுக்கிறான்.

வெறும் கையுடன் வரும் ஜேன்னிடம், ஷரோனிடம் மாட்டிக்கொண்டுவிட்டாய்; அவள் எஃப்.பி..யிடம் போய் நம்மை மாட்டிவிடுவதற்கு முன்னர், பரவாயில்லை மற்றவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்; முதலில் இங்கிருந்து வெளியேரலாம் இப்பொதைக்கு, என்கிறான் பெஞ்சி. மறுக்கும் ஜேன். அவனைத் தப்பித்துப் போகச் சொல்கிறாள். தான் மட்டும் இங்கிருந்து எப்படியாவது இத்தகவலை எடுத்து வருவதாகச் சொல்லி அவனை அனுப்பி வைக்கிறாள்.

அவன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பியவுடன், தனது வாய்க்குள் கைவிட்டு ஒரு சிறிய நூலை உருவுகிறாள். மெள்ள வெளிவரும் அந்நூலின் இறுதியில் ஒரு சிறிய சிப் வருகிறது. ஃப்ளாஷ்பேக்-கில், அலுவலகத்தில் ஷரோன்-இடம் சண்டை போட்ட பின்னர், கை ஃபோனில் இருந்து அத்தகவல் அடங்கிய சிப்பை மட்டும் தனியே எடுத்து ஒரு நூலில் கட்டி முழுங்கிவிடுகிறாள் ஜேன். ஆனால், வெளியே வந்த பின்னர் பெஞ்சியின் தீவிர என்னத்தைத் தெரிந்துகொண்டவுடன், கையில் எதுவும் இல்லை எனப் பொய் சொல்கிறாள்.

இப்போது உலகம் முழுவதும் உள்ள ரகசிய உளவாளிகளின் தகவல் கையில்; என்ன செய்வாள் ஜேன்? இந்த இடத்தில் சுவாரஸ்யமான ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குனர். பெஞ்சி கடைப்பிடிக்கும் முறைகளோடு கருத்து வேறுபாடு இருந்தாலும் ஈஸ்ட்டின் கொள்கைகளில் ஈடுபாடு கொள்கிறாள் ஜேன். எனவே, சிப்-ஐக் கம்ப்யூட்டரில் போடுகிறாள். அதில் இருக்கும் தகவல்களை ஏற்றுகிறாள். ஒவ்வொரு உளவாளியாக நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர்கள் செய்யும் வேலையின் அநீதியான தாக்கத்தையும் சமூகத்தின் மீதும் சுற்றுச் சூழல் மீதும் அதன் தாக்கத்தையும் எடுத்துச் சொல்கிறாள். பெரும்பாலோரை மனமாற்றி சுற்றுச் சூழல் போராளிகளாக மாற்றும் முயற்சியில் இறங்குகிறாள்.

ஈஸ்ட்-டின் தீவிரவாதம் மாறி, நியாயமான போராட்டமாக பரினமிக்கிறது. தீவிரவாதிகள், சட்டத்திற்குட்பட்ட போராளிகளாக மாறுவார்கள் எனும் கருத்தோடு கதை முடிகிறது.   
          
-     - - -
 
                 
சரி; இனி முதலில் கேட்ட கேள்விக்கு வருவோம். இப்படத்தின் இயக்குனரின் சொல்படி “       இன்று உலகை ஆள்பவர்கள் வல்லரசுகள் அல்ல; அவர்களையும் சேர்த்து ஆள்பவர்கள் உண்மையிலேயே பன்னாட்டு நிறுவனங்கள்தான். உலகின் பொருளாதாரத்தையும் அதன் தலைவிதியையும் மாற்றி எழுதும் வல்லமைகூட உள்ளவர்கள், நாட்டு எல்லை கடந்து பரவியிருக்கும் இந்த கார்பரேட்டுகள். எந்த ஒரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாத, தேவைப்பட்டால் அவற்றை தங்களுக்கு சாதகமாக வளைத்து மாற்றி எழுதும் வல்லமையும் பலமும் பொருந்திய இவர்களைக் கண்டுதான் நாம் முதலில் அஞ்சவேண்டும்”.

மிகச் சரியான சொல் இது. அமெரிக்காவின் லூசியானா மாகானத்தில் ப்ரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தின் காரனமாக மிசிஸிபி ஆற்றில் ஆயில் ஸ்லிக் எனும் கரிய படிமம் கலந்து நீரை நிரந்தரமாக அசுத்தப்படுத்தியதோடு ஆற்றங்கரையையும் அடுத்துள்ள கடற்கரையையும் முற்றிலும் மாசுபடுத்தியது.

1930-ம் ஆண்டு துவங்கி, இந்த எண்ணை நிறுவனங்களின் வளர்ச்சியால், சுமார் 2,000 சதுர மைல்கள் விவசாய நிலங்கள் பாழ்பட்டன. விவசாயிகள், அவற்றை முற்றிலும் இழக்க நேரிட்டது. அதுமட்டுமல்ல; அம்மாகானத்தில் கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதால் அவற்றை நம்பி இருக்கும் மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

நிலமையைச் சீர் செய்ய பல போராட்டக் குழுக்கள் களத்தில் குதித்தன. அவ்வப்போது ஏதாவது செய்வதாக போக்குக் காட்டுவது தவிர பெரிதாக எதுவும் செய்யவில்லை இவர்கள். அரசும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை, காரணம் அவை பன்னாட்டு நிறுவன்ங்களின் பையில் எனக் குற்றம் சாட்டுகின்றனர் இவ்வமைப்பினர். இதுபோல பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

லாபத்தை மட்டுமே வெறித்தனமான குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் இவ்வுலகை ஆள்கின்றன; நம் விதியை நிர்னயிக்கின்றன. நாம் தேர்ந்தெடுக்கும் அரசுகள் இவர்கள் பையில். சொந்த லாபத்திற்காக, சாமானியனின் பையில் இருக்கும் மீதப் பணத்தையும் பிடுங்கி அவனைக் கடனாளியாக்க இவர்கள் பரப்புரைக்கும் நுகர்வு கலாச்சாரத்திற்கு எதிராகப் போராட, மிக எளிமையான வழிகளே போதும் என இப்படம் சொல்வதாகக் கொள்ளலாம். குறைவான நுகர்வால், சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்கலாம்


---------------------------------------------------------------------